சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி குத்து விளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தேசிய நிர்வாகிகள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில தலைவர்கள் என சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்.19) டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "இரண்டு நாட்கள் டெல்லியில் பாஜக சிறப்புத் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள 1,700க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்று, 2047 இலக்கு, வளர்ச்சி அடைந்த பாரதம். அதற்கு என்ன செய்யப் போகிறோம். என்ன செய்யப் போகின்றோம் என்பது. இரண்டாவது, எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் என்ற இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், சிறப்பு தீரமானமாகராமர் கோயில் கட்டிடத் திறப்பிற்குச் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு நன்றி கூறப்பட்டது.
என் மண் என் மக்கள் பாதை யாத்திரையின் நிறைவு விழா வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிறைவு விழா சென்னை பல்லடத்தில் சரியாக 27வது தேதி மதியம் 2 மணி தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எனது வாழ்த்துகள். தமிழக மக்கள் நலனுக்காக முன்னேற்றத்திற்காகவும் நல்லது செய்யலாம். அரசியல் கட்சி வேறு பெயராக இருந்தாலும் கூட அடிப்படை பணி ஒன்றுதான். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டு சப்பு கட்டுக் கட்டுவதற்காக EVM மூலமாகப் பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார் எனக் குற்றம் சாட்டுகிறார்" என்றார்.
தொடர்ந்து, பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தரையில் அமர்ந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அண்ணாமலை, "பாஜகவைப் பொறுத்தவரை நாற்காலியில் அமர்வதும், தரையில் அமர்வதும் சாதாரணம். கூட்டத்தில் 11,700 பேர் பங்கேற்றனர். நமது தொண்டர்கள் முன்னும், பின்னும் இருந்தனர்.
மேலும், பாரத் மண்டபம் மிகப்பெரிய மண்டபம். இடைவெளியின் போது தொண்டர்கள் எங்களோடு அமருங்கள் என்றார்கள். அதனால் முன்னாள் தரையில் அமர்ந்து பிரதமர் மோடியின் பேச்சை கேட்டோம். அரங்கிற்குள் சென்றால் பிரதமர், தொண்டர் என்ற வேறுபாடில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம்; கடல் விளையாட்டு தொடர்பான அறிவிப்புகள் என்ன?