சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பனகல் பார்க், பாண்டி பஜார், தேனாம்பேட்டை சிக்னல் வரை வாகன பேரணி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
தமிழிசை சௌந்தர்ராஜன், வினோஜ் பி.செல்வம், பால் கனகராஜ் ஆகிய மூவருக்கும் ஆதரவாகப் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்தநிலையில், நாளை (ஏப்.09) பிரதமர் மோடி சென்னையில் பிரச்சாரம் செய்யும் உள்ள நிலையில் ட்ரோன்கள், ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு உள்ளனர். அதே நேரத்தில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்படவுள்ளது.
தியாகராய நகர், ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிப்பெட் சந்திப்பு, அண்ணா சாலை, 100 அடி சாலை, காந்தி மண்டபம் சாலை ஆகிய இடங்களில் நாளை மதியம் மூன்று மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த சாலையைத் தவிர்த்து மாற்று வழிகளில் பயணிக்க வேண்டும் எனப் போக்குவரத்து போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எந்தெந்த பாதையில் செல்ல தடை: நாளை (ஏப்.09) மதியம் மூன்று மணி முதல் தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதனை ஒட்டி உள்ள வெங்கட் நாராயணன் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன பேரணி பிரச்சாரம் முடியும் வரை வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் வணிக நோக்கிலான வாகனங்கள் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையிலிருந்து கத்திப்பாரா நோக்கிச் செல்லவும், மவுண்ட் பூந்தமல்லி சாலையிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து போலீச்சார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் ரூ.2 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் - முதல்வரிடம் விக்கிரமராஜா கோரிக்கை! - Lok Sabha Election 2024