கோயம்புத்தூர்: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழா திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் இன்று (பிப்.27) நடைபெறுகிறது. இதற்காக அவர் இன்று காலை 9 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். மேலும், இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.
இதற்காகப் பிரதமர் மோடி திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்குப் புறப்பட்டு கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் விமானப்படைத் தளத்திற்குச் சிறப்பு விமானம் மூலம் வருகை தர உள்ளார். பின்னர், சூலூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் 2.35 மணிக்கு பல்லடம் செல்கிறார். அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார்.
பின்னர் பிரதமர் மோடியும், அண்ணாமலையும் வாகனத்தில் ஏறி ஊர்வலமாகப் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்குச் செல்ல உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி வரவிருக்கும் சூலூர் விமானப்படைத் தளத்தைச் சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், விமானப்படைத் தள வளாகத்தைச் சுற்றிலும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படைத் தள வாயில்களுக்கு அருகில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமரின் வருகையை ஒட்டி விமானப்படைத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு இன்று ஒரு நாள் போலீசார் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காங்கிரஸ் நிர்வாகிகளை 'நாய்' என ஒருமையில் பேசிய பாஜக நிர்வாகி.. ஓசூர் அரசு விழாவில் நடந்தது என்ன?