மதுரை: தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஏற்கனவே 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது மேலும் கூடுதலாக சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு வழித்தடத்தில் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் - மைசூர், கோவை, விஜயவாடா, எழும்பூர் - திருநெல்வேலி, கோவை - பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை - பெங்களூரு மற்றும் எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது.
அதன்படி, ரயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு வழித்தடத்தில் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
எழும்பூர் - நாகர்கோவில் ரயில் (20627) சேவை: எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை, சென்னை சென்ட்ரலிலிருந்து ஆளுநா் ஆர்.என் ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த ரயில் சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 09.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த ரயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். மற்ற நாட்களில் எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.
02627 Chennai Central - Nagercoil Vande Bharat Inaugural Special Greets 20666 Tirunelveli - Chennai Egmore Vande Bharat Express at St Thomas Mount #VandeBharatExpress #SouthernRailway pic.twitter.com/iblTYiuoua
— Southern Railway (@GMSRailway) August 31, 2024
சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628) நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். விருதுநகரில் இந்த ரயிலுக்கு நிறுத்தம் கிடையாது.
Watch the 02627 Chennai Central-Nagercoil Vande Bharat Inaugural Special cross paths with the 12636 Madurai Jn-Chennai Egmore Vaigai Express. 🚄🤝#VandeBharatExpress #SouthernRailway pic.twitter.com/V6OWvyVdNe
— Southern Railway (@GMSRailway) August 31, 2024
மதுரை - பெங்களூரு ரயில்(20671) சேவை: மதுரை - பெங்களூரு ரயில் சேவையை மதுரையில் இருந்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் வீ.சோமண்ணா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் வி. இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ரயில்கள் சனிக்கிழமை தொடங்கப்பட்டாலும், செப்.2ஆம் தேதி முதல்வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இவை மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு பெங்களூரு சென்று சேரும்.
மதுரை - பெங்களூர் கன்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (20671) செப்டம்பர் 2 முதல் மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 05.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்று சேரும். மறு மார்க்கத்தில் பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் ரயில் (20672) பெங்களூரு கண்டோன்மெண்டில் இருந்து மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வந்தே பாரத் ரயில்களின் கட்டண விபரங்கள்: மதுரை - பெங்களூரு குளிர்சாதன வசதி இருக்கைகள் கொண்ட பெட்டியில் பயணம் செய்ய, மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ.440, திருச்சிக்கு ரூ.555, கரூருக்கு ரூ.795, நாமக்கல்லிற்கு ரூ.845, சேலத்திற்கு ரூ.935, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ. 1,555, பெங்களூரு கண்டோன் மெண்ட்டிற்கு ரூ.1,575 கட்டணமாக வசூலிக்கப்படும்.
மதுரை - பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி உயர் வகுப்பு இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ.825, திருச்சிக்கு ரூ. 1,075, கரூருக்கு ரூ.1,480, நாமக்கல்லிற்கு ரூ. 1,575, சேலத்திற்கு ரூ.1,760, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ.2 ஆயிரத்து 835, பெங்களூரு கண்டோன் மெண்ட்டிற்கு ரூ. 2 ஆயிரத்து865 கட்டணமாக வசூலிக்கப்படும்.
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி சாதாரண இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய, சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரத்திற்கு ரூ.380, விழுப்புரத்திற்கு ரூ. 545, திருச்சிக்கு ரூ.955, திண்டுக்கல்லுக்கு ரூ.1105, மதுரைக்கு ரூ.1,200, கோவில்பட்டிக்கு ரூ. 1,350, திருநெல்வேலிக்கு ரூ.1,665, நாகர்கோவிலுக்கு ரூ. 1,760 கட்டணமாக வசூலிக்கப்படும்.
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி உயர் வகுப்பு இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய, சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூ.705, விழுப்புரத்திற்கு ரூ.1,055, திருச்சிக்கு ரூ.1,790, திண்டுக்கல்லுக்கு ரூ.2 ஆயிரத்து 110, மதுரைக்கு ரூ. 2 ஆயிரத்து 295, கோவில்பட்டிக்கு ரூ. 2 ஆயிரத்து 620, திருநெல்வேலிக்கு ரூ.3 ஆயிரத்து 55, நாகர்கோவிலுக்கு ரூ.3 ஆயிரத்து 240 கட்டணமாக வசூலிக்கப்படும்.
சிறப்பு அனுமதி: இன்று வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு துவக்க நாள் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை! எப்போது? எங்கெங்கு நிற்கும்? முழு விவரம்!