சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள அன்னை சத்யா நகரில் நேற்று நள்ளிரவில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மக்கள் அதிகம் நடமாடக்கூடிய இந்த பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இப்பகுதியில் செயல்படாத காவல் உதவி மையம் மற்றும் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் குண்டு மேலே விழாமல் முன்னதாகவே சாலையில் விழுந்து வெடித்துள்ளது. அதேபோல், ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு பால முரளி என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அவர் திருச்சி மாவட்ட ரவுடி எனவும், தற்போது மனநலம் பாதித்து சாலையில் சுற்றித் திரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், வெளியே இருக்க விருப்பமில்லாததால் சிறைக்குள் செல்வதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு? சேலம் பெரியார் பல்கலை மாணவர்கள் பரபரப்பு புகார்! - Periyar University Corruption Case