திருநெல்வேலி: தன் மீதான வழக்குகளை மறைத்து நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்துள்ளதால், திருநெல்வேலி மக்களவைத் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் 1500 கோடி ரூபாய் சொத்துக்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மகாராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; “நயினார் நாகேந்திரன் அவர் மீதான வழக்குகளை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் வேட்பு மனு முறையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை, அதேபோல் ரூபாய் 1500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மறைத்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து நான் திருநெல்வேலி மக்களவை தேர்தல் அதிகாரியிடம் முறையாக மனு அளித்திருந்தேன். ஆனால் அந்த மனு மீது எந்தவித விசாரணையும் செய்யாமல், நயினார் நாகேந்திரனின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, இது சட்டவிரோதம்.
எனவே பல்வேறு தகவல்களை மறைத்து மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும், மேலும் முறையாகச் செயல்படாத தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”, என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.