சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர் முன்பாக இன்று (நவ.20) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இதனை அடுத்து, இந்த வழக்கை விசாரிக்க, தமிழகத்தில் பணியாற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: TNPSC தேர்வில் போலிச் சான்றிதழ் கொடுத்து முறைகேடு செய்த வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கெடு!
அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லாததால் அது போன்ற ஒரு குழுவை அமைக்க தேவையில்லை என்று தெரிவித்தனர். மேலும், போலி என்.சி.சி முகாம் நடந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஏற்கனவே 2 பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், மீதம் உள்ள 2 பள்ளிகளுக்கும், ஒரு வாரத்திற்குள்ளாக சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதுமட்டும் அல்லாது, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழுவின் அறிக்கையை பார்வையிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவை பொறுத்தவரையில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தி வரும் காரணத்தினால் மேற்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்