புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் இறையூர் வேங்கைவயல் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் இங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் பல தலைமுறைகளாக அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள டீக்கடைக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியதில் இரட்டை குவளை முறை பயன்படுத்தியது உறுதியானது.
தொடர்ந்து அங்குள்ள அய்யனார் கோயிலை திறந்து பட்டியல் இன மக்களை வழிபடவும் செய்ய வைத்தார். அப்போது கோயிலில் சாமி வந்து ஆடிய பெண்மணி, கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை தரக்குறைவாக பேசினார். இதனைத் தொடர்ந்து டீக்கடை உரிமையாளர் மற்றும் கோயிலுக்குள் நுழைய மறுப்பு தெரிவித்த இருவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மேலும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விரைவு தன்மை இல்லை என்று பல்வேறு தரப்பினர் அறிவுறுத்தி வந்த நிலையில், இந்த வழக்கை டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதனையடுத்து டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். இந்த வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினர் ஒரு வருடம் கடந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான விசாரணைக்கு திட்டமிட்ட சிபிசிஐடி காவல்துறையினர் 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும், இரண்டு பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொண்டனர்.
இவர்களிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரியுடன் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் ஒத்து போகவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் அடுத்தகட்ட முயற்சியாக வேங்கைவயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டரியும் சோதனை நடத்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது பல கட்ட விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மீண்டும் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக இதுநாள் வரை இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி விடுவிக்கப்பட்டு, தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேங்கைவயல் வழக்கின் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட டிஎஸ்பி பால்பாண்டி உடல் நலக்குறைவு காரணமாகவும், இந்த வழக்கின் தொய்வு காரணமாகவும் விடுவிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு!