மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பள்ளியில் இருந்து சிறுநீர் கழிக்க வெளியே சென்ற 12ஆம் வகுப்பு மாணவரை உடற்கல்வி ஆசிரியர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் மாணவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோர் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
குத்தாலம் தாலுகாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 12ஆம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: பேஸ்புக் பிரண்ட் ரிக்வஸ்ட்டில் 38 லட்சம் ருபாய் இழந்த பெண்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!
இப்பள்ளியில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால், மாணவர்கள் வெளியில் சென்று சிறுநீர் கழித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மாணவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன், மாணவரை அழைத்து எங்கு செல்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவர் சிறுநீர் கழிக்க வெளியே செல்வதாக கூறியுள்ளார். அதற்கு ஆசிரியர் பள்ளியில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்துமாறு கூறி பிரம்பால் அடித்து அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மாணவர் வகுப்பறைக்குச் செல்லாமல் விளையாட்டு மைதானத்திற்குச் சென்று கால்பந்து விளையாடுவதை வேடிக்கை பார்த்ததாகவும், அப்போது அங்கு வந்த ஆசிரியர் சீனிவாசன், வகுப்பிற்குச் செல்லாமல் இங்கு ஏன் நிற்கிறாய் என்று கேட்டு மாணவரை அவரது அறைக்கு அழைத்துச் சென்று பிரம்பால் அடித்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும், மாணவரைப் பார்த்து நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல், என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக கூறியுதாக மாணவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்குச் சென்ற மாணவர் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் அடித்ததை பெற்றோரிடம் காண்பித்து கூறியுள்ளார். அதில் அவரது உடல், கை, கால்களில் தோல் சிவந்து, கைமணிக்கட்டு வீங்கியுள்ளது. இதனால் மாணவரை பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் மாணவரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
மாணவர் ஒழுங்காக இல்லாததால் அடித்ததாக பள்ளி நிர்வாகத்திடம் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் புகார் தெரிவித்த நிலையில், அவரை பள்ளி நிர்வாகத்தினர் கண்டித்ததாகவும், இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பூர்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி; காவல்துறை விளக்கம் என்ன?