சென்னை: சென்னை பெருங்களத்தூர் பகுதியில் பல ஆண்டுகாலமாக ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து, ரயில்வே கிராஸிங் மேம்பாலமும், பெருங்களத்தூரில் இருந்து காமராஜர் சாலை மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், அந்தப் பணிகள் கரோனா மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலப் பணிகள் விரைவாக கட்டப்பட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது.
அதன் பின்னர், பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாகச் செல்லும் மேம்பாலம் பணிகள் பல்வேறு கட்டங்களாக கட்டப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் இருந்ததால், உடனடியாக இந்த பாலத்தினை கட்டி முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இது குறித்து கடந்த வாரம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் செய்தியாக வெளியிடப்பட்டது, அதில் இன்னும் ஒரு வார காலத்தில் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாடிற்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்போது தாம்பரம் முதல் செங்கல்பட்டு மார்க்கமாக கட்டப்படும் மேம்பாலம் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, மின்விளக்குகள் அமைத்தும், சாலை பாதுகாப்பு பணிகளும் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நாளை மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மேம்பாலம் திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தை ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாலம் திறப்பு விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பெருங்களத்தூர் பகுதி குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெடுங்காலமாக பெருங்களத்தூர் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு இந்த புதிய பாலத்தின் மூலம் தீர்வு காண முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இனி பெருங்களத்தூரில் டிராபிக் கிடையாது.. மேம்பாலம் பணிகளின் தற்போதைய நிலை என்ன?