புதுக்கோட்டை: சமீபத்தில் சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டராங்க் படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வந்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவில் தமிழ்நாடு தான் பாதுகாப்பான மாநிலம். அதனால் தான் இங்கு அனைவரும் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதுகாப்பாகச் சென்று வழிபாடு செய்கினறனர். மேலும், தமிழநாட்டின் சென்னை மகாபலிபுரத்தில் தான் உலக அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. மேலும், இங்குதான் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.
தொழில்துறை ரீதியாக பார்த்தால், 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு திமுக ஆட்சியில் தான் தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இதில் உலக முதலீட்டாளர்கள் தொழில் செய்ய சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். இதனால் பல லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளது. எனவே, தற்போது நடந்திருக்கும் ஒரு சம்பவத்தை வைத்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட முறையில் நடைபெறும் சம்பவங்களை பெரிதுபடுத்தக்கூடாது.
சட்டப்பேரவையில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்தது குற்றச் சம்பவங்கள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து விட்டார். எனவே, ஒரு சம்பவம் நடந்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான், அரசு மேல் குறை சொல்ல வேண்டும். காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், முக்கியமாக பாதிக்கப்பட்டவர்கள். அப்போதுதான் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும். சில இடங்களில் ஒத்துழைப்பு குறையும்போது குற்றவாளிகளைக் கண்டறிய காலதாமதமாகிறது.
எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் உட்கார்ந்து பேச வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சிகளின் பதிவு ஒன்றுகூட இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கேட்டபோது தாமதமாக 25ஆம் தேதி தான் கொடுத்தார்கள். அதன்பின் நான் என்ன செய்ய முடியும்? சட்டப்பேரவைக்கு என்று ஒரு நடைமுறை உள்ளது. விதிப்படிதான் சட்டமன்றம் செயல்படும். கேள்வி நேரத்திற்கு முன்னதாகவே எதிர்க்கட்சிகள் வெளியே போக வேண்டும் என்று தகராறு செய்தால் நாம் என்ன செய்ய முடியும்?” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “எனது உயிருக்கும் அச்சுறுத்தல்..” ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரைச் சந்தித்தபின் அன்புமணி ராமதாஸ் பேட்டி