திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை தாலுகாவிற்கு உட்பட்ட கண்ணநல்லூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்ததாக தெரிகிறது. அதற்கு வருவாய்த்துறையினர் ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கண்ணன் வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, வருவாய்த்துறை என்ற துறை உள்ளது. வருவாய்த்துறை அலுவலகத்தில் காலை வைத்தாலே லஞ்சம் கேட்கிறார்கள். லஞ்சம், லஞ்சம், எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நான் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தேன், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். அதற்கு எல்லா ஆவணங்களும் சரியாக இருப்பதால் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்தேன்.
இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், அந்த புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடனை வாங்கி இடத்தை வாங்கினால், இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தாழ முடியவில்லை. தயவு செய்து லஞ்சத்தை சட்டம் ஆக்கி விடுங்கள், இல்லாவிட்டால் லஞ்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்" என வீடியோவில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சேரன்மகாதேவி உதவி ஆட்சியர், இந்த புகார் தொடர்பாக இரு தரப்பினரிடைய விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் வழக்கு விசாரணையின் இறுதி ஆணையின் படியே பட்டா மாறுதல் வழங்க இயலும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாஞ்சோலை மக்கள் விரும்பியே வெளியேறுகிறார்கள்: நெல்லை ஆட்சியர் பேச்சால் சர்ச்சை! - Thirunelveli Collector On Manjolai