சென்னை: மயிலாப்பூர் பகுதியில் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு, தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரபலமான சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலானது, தமிழ்நாடு அரசு அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி நள்ளிரவில் போதை ஆசாமி ஒருவர் கையில் பெட்ரோல் கேனுடன் கோயிலின் பூட்டப்பட்ட கதவின் முன்பு உள்ள நுழைவு வாயிலில் அமர்ந்துகொண்டு, பெட்ரோலை தரையில் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
தக்க சமயத்தில் பொதுமக்களின் கவனத்திற்குச் சென்ற இந்த சம்பவம் குறித்து, மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், போதையில் பெட்ரோலை ஊற்றி தீப்பற்ற வைத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பானது. மேலும், இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலானது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட மயிலாப்பூர் போலீசார், தீன தயாளன் என்ற நபரை சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (பிப்.13) கைது செய்துள்ளனர்.
ஆனால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்றபோது அவரை கைது செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர் சைக்கிளில் சென்று, அங்கிருக்கும் செருப்புகளை திருடிச் சென்று கோபுரம் முன்பாக வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், இவர் இது போன்று பெசன்ட் நகர், பல்லாவரம் பகுதிகளிலும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடவுள்தான் தன்னை கொளுத்தச் சொன்னதாகக் கூறி அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி சலோ; விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!