சென்னை: விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், அணி வகுப்புக்கு அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அளித்த மனுக்களை பரிசீலித்து வருவதாகவும், செப் 29ம் தேதிக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும் அணி வகுப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.
ஒவ்வொரு வருடமும் ஒரே வழித்தடத்தில் தான் அணி வகுப்பு நடைபெறுகிறது. அதற்கான விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்ட பின்னரும், அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதி விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதற்கு முன்பாக, அனுமதிக்கோரிய விண்ணப்பங்கள் மீது பரிசீலித்து முடிவுகளை அறிக்கையாக தெரிவிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்