திருச்சி: 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் 'பூலோக வைகுண்டம்' என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவதும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக தினசரி சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, திருச்சிக்கு வருகை புரிந்து ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர், கார் மூலம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை வந்தடைந்தார். பின்னர் ஆரியபடாள் வாசல், தாயார் சன்னதி, ராமானுஜர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி ஆகிய முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தேவகவுடா கூறுகையில், "நான்காண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்துள்ளேன். எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் இந்திய மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கோயிலாக உள்ளது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டது குறித்து உள்ளிட்ட எந்தவித அரசியல் குறித்தும் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்றார்.
தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு உபரி நீர் தான் வழங்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "காவிரி பிரச்சனை குறித்து தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியாளர்களுக்கு இதற்கு முன்பு ஆண்டவர்கள் அனைவருக்கும் முழுமையான விவரங்கள் தெரியும்.
பெங்களூரில் மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சரியான குடிநீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். இதில் ஒளிவு மறைவு இல்லை; அனைவரும் அறிந்த செய்தி தான். தமிழ்நாட்டில் ஆளும் கட்சிகளுக்கும் இது தெரியும்.
இதுகுறித்து இதற்கு மேல் நான் கருத்து கூற விரும்பவில்லை. பெங்களூரு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். காவிரி பிரச்சனை குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும்; அந்த நாள் விரைவில் வரும்; அன்று அந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்" என்று தேவகவுடா தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவில் திருவிழாவில் நடந்த மோதல்.. இளைஞர் குத்திக் கொலை.. திருப்பத்தூரில் பரபரப்பு..!