சென்னை: பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் விநாயகர் சதுர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்த கூறுவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவர் அண்ணமலை, இந்த அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவர் அண்ணாமலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தம் பள்ளிக் கல்வித் துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரா? அல்லது மத்திய அரசின் முகவராக இருந்து துறையை நடத்துகிறாரா? அல்லது ஆன்மிக துறையின் பொறுப்பை இவரே ஏற்றுக் கொண்டாரா?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தனது கடிதத்தில் அண்ணாமலை, அரசியல் கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுவதற்கு முன்னர் இவரை முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பிலிருந்து விடுவித்து அதிகாரமற்ற ஒரு பதவியில் அமர்த்திட வேண்டுமாய் ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் என்ற முறையில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
செப்டம்பர் 5 சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் மக்களிடம் நன்கொடை பெற்று தொடக்கக் கல்வி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வரை PM POSHAN திட்டத்தின் கீழ் நல் விருந்து அளிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.
அடுத்ததாக செப்டம்பர் 7ந் தேதி பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். இவர் என்ன ஆன்மீகத்துறையின் பொறுப்பை ஏற்று நடத்துகிறாரா? கலைமகள் விழாவையே கொண்டாடச் சொல்லி அரசு ஆணை வழங்கவில்லை. அடுத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்தச் சொல்லி சுற்றறிக்கை அனுப்புவார். பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் செயல்படுகிறது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக இவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பில் இருந்து விடுவித்து அதிகாரமற்ற பொறுப்பில் நியமனம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் என்ற முறையில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
அரசியல் கட்சிகளின் போராட்டம் வெடிக்கும் முன் தீர்வு காண வேண்டுமாய் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளிலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அது சம்பந்தமான விழிப்புணர்வு கொண்ட உறுதி மொழியை தங்கள் பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் பங்கேற்க செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்'' எனவும் அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கற்பக விநாயகர், எலி விநாயகர்..என மயிலாடுதுறையில் விதவிதமாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சிலைகள்!