திருநெல்வேலி: பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள தெற்கு பஜார் செல்லும் சாலையில், ஏராளமான சாலையோர நடைபாதை உணவகங்கள் இரவு நேரங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் உணவருந்திச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், செல்வ சுரேஷ் என்பவர், தனது குடும்பத்தினருடன் புளியம்பட்டி அந்தோனியார் கோயில் திருவிழாவிற்குச் சென்று விட்டு, நேற்று (பிப்.6) தனது சொந்த ஊரான முக்கூடல் செல்லும் வழியில், நெல்லையில் உணவருந்துவதற்காக சாலையோர கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, இரவு நேரம் மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரக் கடைகளில் உணவு அருந்திக் கொண்டிருந்தவர்களின் மீது மோதி உள்ளது.
இதில் சாலையோரம் உணவகத்தை நடத்தி வந்த சிவசாமி, அவரது மனைவி மாலையம்மாள், மகன் அருண் பாண்டி ஆகிய மூன்று பேரும், மேலும் கடையில் உணவருந்திக் கொண்டிருந்த செல்வ சுரேஷ் (38), அவரது மனைவி ஞான பிரியா (30), மகன்கள் சுபின் ராஜ் (9), சாம் காட்வின் (7) ஆகிய ஏழு பேரும், படுகாயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்தவர்கள் அதிக மது போதையில் இருந்ததும், அவர்கள் திருநெல்வேலி சாந்தி நகரைச் சேர்ந்த ப்ரீத்தம் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ், ஜெபசீலன் ஆகிய மூன்று பேரும் என்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் மூவரும் நேற்று இரவு ஒன்றாக சேர்ந்து மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் காரை ஓட்டி வந்துள்ளனர். காரில் எங்கு செல்வது என்பது கூட தெரியாத அளவுக்கு போதை தலைக்கேறியதால், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி வழியாக சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போதுதான் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உணவருந்திக் கொண்டிருந்த நபர்கள் மீது மோதியுள்ளது.
இதில் தினேஷ் மற்றும் ஜெபசீலன் ஆகிய இருவரும் சம்பவம் நடந்த அடுத்த நொடியே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். காரில் இருந்த ப்ரீத்தம் என்ற நபரை மட்டும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது காருக்குள் மது பாட்டில்கள் இருந்துள்ளது. தற்போது பிடிபட்ட ப்ரீத்தம் என்ற நபரிடம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் சாலையோரக் கடை உரிமையாளர் சிவசாமிக்கு தீக்காயமும், அவரது மனைவி மாலையம்மாளுக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள் சாம் காட்வின் மற்றும் சுபின் ராஜ் இருவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் போக்சோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் கைது!