சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து கடந்த வெள்ளத்தில் பாதிப்பு ஏற்பட்டது போல இந்த முறையும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தங்களுடைய வாகனங்களை அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் மேம்பாலத்தில் சென்று நிறுத்தினர்.
குறிப்பாக வேளச்சேரி மிகவும் தாழ்வான பகுதி என்பதால் அங்குள்ள மக்கள், வேளச்சேரி மேம்பாலத்தில் தங்களது வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தினர். இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்துவிட்டது என்பதால் சென்னையில் மழை அதிகமாக பெய்யும் வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். எனவே வேளச்சேரி மேம்பாலத்தில் தங்களது கார்களை நிறுத்தி இருந்த மக்கள், மீண்டும் தங்களது வாகனங்களை அங்கிருந்து வீட்டிற்கு எடுத்துச் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து வேளச்சேரியை சேர்ந்த கணேசன் பேசுகையில், “இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டினாலும் போக்குவரத்து இடையூறு ஏதும் ஏற்படவில்லை. போன வருடம் வாகனங்கள் வைத்திருக்கும் வேளச்சேரி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த முறை அவ்வாறு நடக்க கூடாது என்பதற்காக மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்தினர். இரு புறங்களிலும் கார்கள் இருந்தாலும் நடுவே இடம் இருந்தது. இந்த மேம்பாலத்தில் கார் ஆட்டோ மற்றும் டூவீலர்கள் மட்டுமே செல்ல வேண்டும்.
இதையும் படிங்க: சென்னைவாசிகளுக்கு மழைக் காட்டிய பயம்; தி.நகர் கலைவாணர் மேம்பாலத்திலும் வரிசைக்கட்டி நிற்கும் கார்கள்!
ஆனாலும் சிலர் பெரிய பெரிய வாகனங்களை இந்த மேம்பாலத்தில் இயக்குகின்றனர். இந்த பகுதி மக்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு அபராதம் கூட கட்டுகின்றோம் என்று தெரிவித்திருந்தனர். மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு தினமும் ஆயிரம் ரூபாய் அபராதம் என காவல்துறை விதித்திருந்த போதிலும், அது கூட பரவாயில்லை. பத்தாயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய்க்கு பழுது ஏற்பட்டு விடும் என்று அஞ்சி இங்கே தங்களது கார்களை நிறுத்தினர்.
இந்த அரசாங்கம் சொல்வார்கள். ஆனால் எதையும் செய்ய மாட்டார்கள் என்று அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் மக்கள் இருந்து விட்டனர். வேளச்சேரி பாலத்தில் மட்டுமல்ல அனைத்து பாடங்களிலும் வாகனங்கள் நிறுத்தியுள்ளனர். சென்னை நேப்பியர் மேம்பாலத்தில் கூட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரே ஒரு நாள் தான் மழை பெய்ததால் எங்கள் பகுதியில் அதிகப்படியான தண்ணீர் தேங்கவில்லை. மாநகராட்சி பணியாளர்கள் முன்னேற்பாடுகளோடு இருந்தனர்.
படகுகளும் கைவசம் இருந்தன” என தெரிவித்தார். வேளச்சேரி விஜயநகரை சேர்ந்த சக்கரபாணி கூறுகையில், “இருபுறங்களும் கார் நிறுத்தி இருந்தது போக்குவரத்திற்கு எந்த ஒரு இடையூறும் இல்லை. வெள்ளம் வரும்போது காரை பாதுகாக்க வேண்டும் என்பதால்தான் மக்கள் வாகனத்தை மேம்பாலத்தில் நிறுத்தினர். ஒரே ஒரு நாள் மழை பெய்ததால் தண்ணீர் உடனே வடிந்து விட்டது. மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து தண்ணீரை அப்புறப்படுத்தினர்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்