மயிலாடுதுறை: ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை, ஆடி மற்றும் தை அமாவாசை ஆகிய தினங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.
அந்த வகையில், அமாவாசை நாளான இன்று (பிப்.9) காலை முதலே, பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக மயிலாடுதுறை மாவட்ட காவிரி துலாக்கட்டத்திற்கு வந்தனர். ஆனால், காவிரியில் நீர்வரத்து இல்லாததால், தங்கள் வீடுகளில் குளித்து விட்டு, காவிரியின் வடக்கு கரையில் தங்கள் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் பூஜைகள் செய்த பிண்டங்களைக் கரைக்க முடியாமல், நீர்த்தேக்கக் கிணறுகளிலேயே போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனால் துலாக்கட்ட காவிரி வெறிச்சோடி காணப்பட்டது.
முன்னதாக, மயிலாடுதுறையில் உள்ள அனைத்து சிவ ஆலயங்களிலிருந்தும் ஐப்பசி மாதம் முழுவதும் சுவாமிகள் வீதி உலாவாகச் சென்று, காவிரி துலாக்கட்டத்தில் அருள் பாலிப்பர். பின்னர், காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி 30ஆம் தேதி கடை முக தீர்த்தவாரி நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, புனித நீராடி சாமி தரிசனம் செய்வர். பல்வேறு சிறப்புகள் உடைய இந்த துலாக்கட்டத்தில், ஆற்றின் நடுவே 16 தீர்த்தக் கிணறுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம். இதற்காக மயிலாடுதுறை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து தர்ப்பணம் கொடுத்துச் செல்வர்.
இதையும் படிங்க: "அறிமுக இயக்குநர்களின் வளர்ச்சிக்கு நான் ஒரு கருவி தான்"- நடிகர் ஜெயம் ரவி!