தென்காசி: தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோயிலில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு 7.5 கோடி ரூபாயில் இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து கோயில் திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்பு, மாநில செயலாளர் கார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த 9ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கும்பாபிஷேகம் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டு மனு அளித்திருந்தார். அதில் சங்கரநாராயணசாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.
இதற்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? தனிநபர்களிடமிருந்து இன்றுவரை வசூலித்த நிதி எவ்வளவு, இன்றைய தேதி வரை எந்தெந்த பணிகள் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு கள ஆய்வு செய்யப்பட்ட தேதி என்ன, கள ஆய்வின்போது யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்.
அது தொடர்பாகக் குறைகளை கலந்திட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன, ராஜகோபுரத்தில் கடந்த காலத்தில் பஞ்சவர்ணம் பூசப்பட்டுள்ளதா, உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைத் அவர் கேட்டிருந்தார்.ஆனால் இவை எதற்கும் உரிய பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இன்று சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் அலுவலகத்திற்குச் சென்று கொடுத்த மனுவிற்கான பதில்களைக் கேட்கச் சென்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து ஆலய பாதுகாப்பு, மாநில செயலாளர் கார்த்திகேயன் கூறியதாவது,"சங்கரன் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(ஏ)1 இன் கீழ் மனு அளித்திருந்தோம்.
ஆனால் இதுவரை அதற்கான உரிய பதில்கள் அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. சங்கரன் கோவில் பக்தர்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். எந்த ஒரு பணிகளும் சிறப்பாக இல்லாததால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாங்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தோம்.
ஆனால் இதுவரை அதிகாரிகள் தரப்பிலிருந்து உரிய பதில்கள் கிடைக்கப்பெறவில்லை. கோயில் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். கோபுரத்திற்கு மூலிகை வர்ணம் பூச வேண்டும். இல்லை என்றால் அனைத்து இந்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம்" என்று கார்த்திகேயன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ் அப் சேனில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 6 வீடுகளுக்கு 3 அடி வழி தான்.. கோயில் கட்டும் பெயரில் அடிதடி, களேபரம்.. திருப்பத்தூரில் பரபரப்பு!