தென்காசி: தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் அருகே உள்ள கலிங்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (42). இவர் சொந்தமாக மதுபான பார் ஒன்று நடத்தி வருகிறார். இவர், கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சுரண்டை பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக சுரண்டை காவல் ஆய்வாளர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் ஆய்வாளரது காவல் வாகனம் சுப்ரமணி மீது ஏறி இறங்கியதாகவும் கூறப்படும் நிலையில், சுப்ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் சுரண்டை பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுரண்டை பேருந்து நிலையம் மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதி என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், விபத்துக்குக் காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சுரண்டை அருகே காவல்துறை வாகனம் மோதி திமுக நிர்வாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இரவு நேரத்தில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால் தென்காசி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், மாவட்டம் நிர்வாகத்தின் சார்பாக வி.கே.புதூர் தாசில்தார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நீண்ட நேரமாக தனியார் மருத்துவமனைக்கு முன்பாக உறவினர்கள் தருண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, அந்த பகுதியில் தொடர்ச்சியாகப் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என காவல்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.
ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிடவிடாமல், சுமார் ஆறு மணி நேரப் போராட்டம் நடத்தினர். இதன் பின்பு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேசியபோது, "தற்பொழுது தேர்தல் நேரம், உங்களுடைய கோரிக்கை தேர்தல் முடிந்த பின்பு கண்டிப்பாக நிறைவேற்றப்படும்" என்று சொல்லிய பின்பு போராட்டக்காரர்கள் போற்றத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கொலை குற்றவாளி மரணம்.. திருவள்ளூரில் பரபரப்பு!