திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியைச் சேர்ந்தவர் ஜான் மூர்த்தி. இவர் 1970ஆம் ஆண்டிலிருந்து அதே பகுதியில், கிறிஸ்தவ குல கண் மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும், இந்த மருத்துவமனைக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜான் மூர்த்தி இறந்து விட்டதால், அந்த இடத்தை அவருடைய மகள்கள் ஷீலா (54), ஜெரியா ஆக்கின்ஸ் லீனா (50) மற்றும் மகன் பிரதாப் சிங் (52) ஆகியோர் பராமரித்து வந்துள்ளனர். மேலும், அங்கு கண் மருத்துவமனை செயல்படாததால், குடோன்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
அதில், நான்கு கடைகளில் பாஞ்சாலி என்பவர் உரக்கடையும், திருப்பத்தூர் எம்எல்ஏவின் சகோதரர் அருணாகிரி என்பவர் கோணிப்பை சேமிப்பு குடோனும், ஒரு தனியார் மருத்துவமனை ஆகியவை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், உஷா என்பவர் அங்கு ஆவின் பால் கடை வைப்பதற்காக குடோனில் வாடகைக்கு எடுத்து, அதற்காக ஷீலாவிடம் பணம் கொடுத்துள்ளார்.
ஆனால், அங்கு பால் கடை வைக்கக் கூடாது என அங்கு ஏற்கனவே வாடகைக்கு உள்ள நபர்கள் பிரச்னை செய்ததாகவும், மேலும் செல்வக்குமார் என்ற நபர் அந்த இடம் தனக்குச் சொந்தம் எனக் கூறி பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதனால், ஆத்திரமடைந்த ஜான் மூர்த்தியின் வாரிசுகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, அங்கு ஏன் பால் கடை வைக்கக்கூடாது என கேட்டு அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் ஊர் மக்கள் ஒன்று திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா, "நீண்ட நாட்களாக இந்த இடத்தை நானும், என் தங்கை, தம்பி ஆகிய மூவரும் பராமரித்து வருகிறோம். இந்நிலையில், தற்போது கண் மருத்துவமனை செயல்படாததால் வாடகைக்கு விட்டு அந்த வாடகை பணத்தை தாங்கள் பெற்று வருகிறோம். தற்போது உஷா என்பவருக்கு ஆவின் பால் கடை வைப்பதற்கு கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே வாடகைக்கு உள்ள நபர்கள் ஆவின் பால் கடை வைக்கும் நபர் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் பிரச்னை செய்கின்றனர்.
மேலும், செல்வகுமார் என்பவர் அந்த இடம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி பிரச்சனை செய்வதாகவும், அதற்கு திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி உறுதுணையாகச் செயல்படுவதாகவும், போலீசாரும் இதற்கு துணை போவதாகவும் குற்றம் சாட்டிய அவர், இந்த இடம் தனக்குச் சொந்தமானது என கூறும் செல்வகுமார் நேரில் வந்து இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் மத்தியில் பேச வேண்டும். அதற்கான ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் என்றார்.
தற்போது எம்எல்ஏ நல்லதம்பி சாதிரீதியாக செயல்படுவதாகவும், எம்எல்ஏவின் தூண்டுதல் காரணமாகவே பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் வாடகைக்கு வருவதை அங்குள்ளவர்கள் தடுப்பதாகவும், இதனால் சாதிக் கலவரம் ஏற்படும் சூழல் உள்ளதாகவும்" தெரிவித்தார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02-09-2024/22355587_protest.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "திமுக மூத்த அமைச்சர்கள் அனைவரும் உதயநிதியின் அடிமைகள்" - எச்.ராஜா விளாசல்!