வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. அவற்றுள் அணைக்கட்டு தாலூக்காவில் ஜவ்வாதுமலை தொடரில் அமைந்துள்ள பீஞ்சமந்தை ஊராட்சியில் சுமார் 48 மலை கிராமங்கள் உள்ளனர். இந்த ஊராட்சியை சேர்ந்த மலை கிராமங்களான கட்டியப்பட்டு, தேந்தூர், புளிமரத்தூர், பாலாண்டூர், புதூர், கோராத்தூர், சாட்டாத்தூர், குடிகம், புதுகுப்பம் , குப்சூர், பிள்ளையார் குட்டை, பெரிய கொட்டான்சட்டு, சின்ன கொட்டான் சட்டு, நாச்சிமேடு உள்ளிட்ட 14 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கும், அன்றாட தேவைகளுக்கும் மற்றும் அவசர தேவையான மருத்துவ வசதிக்கும் மலை கிராமத்திலிருந்து கிழே இறங்கி சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுகத்தூர் பகுதிக்கு செல்லவேண்டிய கட்டாய சூழலில் உள்ளனர்.
இந்த நிலையில், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் எனும் கிராமத்தில் இருந்து மலை கிராமம் வரையில் உள்ள சாலையே இவர்களின் பிரதான சாலையாக இருந்து வருகிறது. மேலும், இந்த சாலையானது கடுமையாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இந்த மலைவாழ் மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சாலையை மலைவாழ் மக்களே,வனத்துறையினர் எதிர்பை மீறி தங்களுக்காக அந்த பகுதியில் தற்காலிக மண்சாலைய அமைத்து கொண்டுள்ளனர். இதன் பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன் வனத்துறையினர் மூலம் ரூ. 4.80 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வந்துள்ளது.
சாலை வசதி: இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற சாலை பணியும் முழுமையாக முடிக்கப்படாமல் ஆங்காங்கே சிறிது தொலைவிற்கு சாலைகள் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும், சிறிது தொலைவிற்கு போடப்பட்ட சாலைகள் நிறைவடையாத நிலையில், சேதம் அடைந்துள்ளதாகவும் மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி வசதி: இங்கு சரியான சாலை வசதி இல்லாததாலும், கல்வி கற்க உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் இல்லாததாலும் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளை சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்பாடி பகுதியிலும், 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகொண்டா பகுதியிலும் உள்ள பள்ளிகளில் சேர்த்து அரசு விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைத்து வருகின்றனர். இதனால், தங்களின் பிள்ளைகளுக்கு தங்கள் மீது பாசம் இல்லாமல் இருப்பதாக கடும் மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ வசதி: தொடர்ந்து, இப்பகுதியில் கர்ப்பிணிகள் பிரசவிக்கும் போது அவர்களை அழைத்துச் செல்ல வரும் ஆம்புலன்ஸ் வாகனம், மேலேயே பிரசவம் பார்த்த பின்னர் தான் அவர்களை கீழே அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். எனவே, முறையான மருத்துவ வசதிகளும், சாலை வசதிஅயியும் ஏற்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தனி ஊராட்சி: மேலும், இப்பகுதி மக்கள் தங்களின் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, தங்கள் ஊராட்சியே தனி ஊராட்சியாகவும் பிரித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே, எங்கள் பகுதிக்கு முறையான பள்ளி, மருத்துவம் மற்றும் குறிப்பாக சாலை வசதி ஏற்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலையில் நின்று கோஷங்கள் எழுப்பி தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு சாலையில் ஆட்டோவில் சாகசம்.. போலீசார் செய்த சிறப்பான செய்கை! - Auto Driver dangerous driving