குன்னூர்: நீலகிரியில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், இத்தைகைய இழப்பிற்கு காரணம் யார்? நகராட்சி நிர்வாகம் காரணமா? அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டுப்பட்டுள்ளதா? ஏரிகளில் வீடுகள் கட்டுப்பட்டதா? இதற்கு என்ன நடவடிக்கை என பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஓடைகள் மற்றும் கால்வாய்களில் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவும், மரங்கள் விழுந்தும் விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள சேட் காம்பவுண்ட் பகுதியில் பெய்த கனமழையால் திடீரென நடைபாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக வீட்டின் மீது ஏற்பட்ட மண் சரிவின் போது வீட்டின் கதவை திறந்த ஆசிரியை விஜயலட்சுமி மண்ணில் புதைந்து உயிரிழந்தார். வீட்டில் இருந்த ஜெயலட்சுமியின் கணவர் மற்றும் குழந்தைகள் வீட்டின் உள்பக்கம் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த ஜெயலட்சுமியை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நீலகிரி: குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு
அதனைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற நகர மன்றக் கூட்டத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஆசிரியருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் உரையாற்றிய நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன், “பருவமழை துவங்குவதற்கு முன்பாக கால்வாய்கள், பாதாள சாக்கடைகள் மற்றும் வடிகால் நீர் செல்லும் பாதைகள் சுத்தப்படுத்த வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவிக்கு முக்கிய காரணம் குடியிருப்பு அருகே கொட்டப்பட்டிருந்த கட்டிடக்கழிவுகள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எதிர்கொள்ள நிர்வாகம் துரிதமாக செயல்படவில்லை”என குற்றச்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து துணைத்தலைவர் வாசிம் ராஜா, “மழைக்காலத்திற்கு முன்பாக குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாய்கள் விரைவில் தூர்வாரப்படும்” என உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பேரிடர் மீட்பு குழுவைச்சேர்ந்த முபாரக் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. குன்னூர் நகராட்சி பகுதியில் பல இடங்கள் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் மண் சரிவுகள் ஏற்படுகின்றன.
நகராட்சி ஊழியர்களுக்கு எந்தவித உபகரணங்களும் வழங்கப்படவில்லை. அவசர உதவிக்கு ஜேசிபி எந்திரங்கள் கிடையாது. முறையாக வடிகால் மற்றும் அனுமதியற்ற கட்டிடங்கள் அதிக அளவில் தற்போது உள்ளதால் மண் சரிவில் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். எனவே, குன்னூர் நகராட்சி நிர்வாகம் முறையாக கட்டிட அனுமதி வழங்கி மழைக்காலங்களில் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும். மழைநீர் ஆறுகளில் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து, இது குறித்து சமூக ஆர்வலர் டேனியல் பேசியதாவது, “நேற்று பெய்த பலத்த மழையில் மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நகராட்சி முறைப்படி செயல்பட வேண்டும். இடத்தின் தரம் அறிந்து கட்டிடம் கட்ட அனுமதி அளிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் கால்வாய் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முறைப்படி நகராட்சி நடவடிக்கை எடுத்தால் இங்கு நடக்கும் பல்வேறு விபத்துகளை தடுக்கலாம்” என்றார்.
முன்னதாக, கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் பெய்த தொடர் கன மழையில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் 43 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதன் காரணமாக நிலச் சரிவான பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்