அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி சாலையில், இன்று (மே.06) கனரக வாகனம் ஒன்று மோதி நாய் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதாகக் கூறி 100க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் பல்வேறு கிராமங்களிலிருந்து, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விதிமுறைகளை மீறி இரவு பகல் பாராமல் 500-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் ஏரிகளிலிருந்து மண் எடுத்துச் செல்லப்படுவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் காரைக்குறிச்சி சாலையில் இன்று மண் ஏற்றி சென்ற லாரி ஒன்று, நாய் மீது மோதியதில், நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டனர். பின்னர் அவ்வழியே வந்த 100 க்கும் மேற்பட்ட லாரிகளை இயக்க விடாமல் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் காரைக்குறிச்சி-அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த தா.பழூர் போலிசார், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நேரங்கள் மட்டுமின்றி, இரவு பகல் பாராமல் கனரக வாகனங்கள் வேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுத்துவதாகவும், இதனால் மனித உயிர் சேதம் ஏற்படுவதோடு, தொடர்ந்து கால்நடைகளும் அதிகம் உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனை கேட்ட போலீசார், இதற்கு உரிய தீர்வு காண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் இது பற்றி கிராம மக்கள் கூறுகையில், “இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாகப் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவதற்கும் தயாராக உள்ளோம்” என எச்சரிக்கை விடுத்தனர். பொதுமக்கள் நடத்திய இப்போராட்டம் காரணமாக அரியலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.