சென்னை: சூலூர்பேட்டையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை செல்லும் ரயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக வெகுநேரம் ரயில் நிறுத்தி வைக்கப்படுவதால் ஆத்திரமடைந்த பயணிகள், தண்டவாளத்தில் இறங்கி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பயணிகள் கூறுகையில், “கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் பணிக்குச் செல்பவர்களுக்கு ரயிலின் தாமதத்தால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும், சென்னை கொருக்குப்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருகிறது.
மேலும், கொருக்குப்பேட்டையில் பயணிகள் ஏறிய பின்னர், பேசின் பிரிட்ஜ் ரயில்வே நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சில நிமிடங்களுக்கு ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதனால் பணிக்குச் செல்பவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. காலம் தாழ்த்தி வருவதால், பணி செய்யும் இடங்களில் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது” எனக் கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், இன்று தண்டவாளத்தில் இறங்கி மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மற்றும் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இனிமேல் இதுபோன்ற காலதாமதம் நடைபெறாது என்று உறுதி அளித்ததன் பேரில், பயணிகள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர். இந்த மறியல் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து பணிக்குச் செல்லும் பயணிகள் எண்ணூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, விம்கோ நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.