கன்னியாகுமரி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து, நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்து ஒன்று நேற்று (பிப்.24) இரவு புறப்பட்டுள்ளது. அந்த பேருந்தை, ஆதன்கோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். பேருந்தில் நடத்துநர் உள்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்த பேருந்து, நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தைத் தாண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டெரிட் சந்திப்பு அருகில் இரவு 10 மணி அளவில் வந்தபோது, பேருந்து திடீரென சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்துள்ளது. மேலும், மோதிய வேகத்தில் சுமார் 10 மீட்டர் தூரம் வரை பேருந்து சாலையில் இழுத்தபடி சென்றுள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தால், பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறி உள்ளனர். இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து, பேருந்தில் சிக்கி இருந்த ஓட்டுநர் ரமேஷ் உள்பட பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பரபரப்புக்கு இடையே பேருந்தில் இருந்து டீசல் கசியத் தொடங்கியுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், மீட்புப் பணியில் ஈடுபட பொதுமக்கள் தயங்கி உள்ளனர். இதற்கிடையே வடசேரி மற்றும் நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் பயணிகள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மற்றும் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த அனுவர்ஷன் ஆகிய இரண்டு பேரும் பேருந்தில் சிக்கிக் கொண்டதால், அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்திருந்தனர். அதோடு, மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சுஜா மற்றும் தோவாளை பகுதியைச் சேர்ந்த சுந்தர் உள்பட 9 பேருக்கும் இந்த விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் 4 பேர் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்துத் துறை அலுவலக அதிகாரிகளும் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து நடைபெற்ற போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நாகர்கோவில் பாரதிபுரம் பாலத்தில் இருந்து வந்தபோது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் வேகமாக வந்ததாகவும், அவர்கள் பேருந்துக்கு வழிவிடாமல் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், டெரிக் சந்திப்பு அருகே வந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர், திடீரென பேருந்தின் குறுக்கே வந்துள்ளார்.
எனவே மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் பேருந்தை வலது புறம் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து இத்தகைய விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து, அதில் பதிவாகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: செஞ்சி ஆட்டோ விபத்து: உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு