திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் பிரபு (53). இவர் 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலியிலிருந்து செங்கல்பட்டுக்கும், பின்னர் விருத்தாச்சலத்தில் இருந்து திருநெல்வேலிக்கும் ரயிலில் பயணிக்க தனது குடும்பத்தில் உள்ள 3 பெரியவர்கள், 1 குழந்தை என 4 பேருக்கு முன்பதிவு டிக்கெட் எடுத்துள்ளார்.
இதற்காக ரயில்வே டிக்கெட் கவுண்டரில் ரூ.5,815 பணம் செலுத்தி உள்ளார். ஆனால் சொந்த காரணங்களுக்காக அந்த பயணம் கைவிடப்பட்டதால் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்துள்ளார். அதில், பிடித்தம் போக ரூ.4,860ஐ திரும்ப தருவதாக ரயில்வே துறையினர் தெரிவித்தனர். ஆனால், ரயில்வே துறையிடம் பல முறை கேட்ட பிறகும் அவருக்கு அந்த தொகை திரும்ப கிடைக்கவில்லை.
இதையும் படிங்க : பல்லவன் விரைவு ரயிலில் தீ விபத்து.. பயணிகள் பதறியடித்து ஓடும் காட்சி வைரல்!
இதனால் விரக்தியடைந்த அவர், வழக்கறிஞர் பிரபாகர் மூலம் இந்திய ரயில்வே துறைக்கு எதிராக திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் பிளாசட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில், ரயில்வே அதிகாரிகள் பயணியை ஏமாற்றும் போக்கில் நடந்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து ரயில்வே துறை சார்பில் ரூ.25,000ஐ இழப்பீடாக பிரபுவிற்கு வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவாக ரூ.5000மும் சேர்த்து வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-10-2024/22581809_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்