சென்னை: சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, செஞ்சி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல நேற்று முன்தினம் இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக அளவில் பயணிகள் குவிந்தனர்.
பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பல மணி நேரமாக பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், நேற்று அதிகாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாநகரப் பேருந்துகள் மூலமாக அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று பேருந்துகள் பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு, கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இருந்த போதிலும், இன்று அதிகாலை 2 மணி முதல் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாததன் காரணமாக, மற்ற ஊர்களுக்குச் சென்ற அரசுப் பேருந்துகளை சிறை பிடித்து, தொடர்ந்து இரண்டாவது நாளாக 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி துணை ஆணையர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளில் ஒரு சிலர், தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். உடனடியாக அவர்களை போலீசார் அழைத்து வந்து, மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைத்தனர். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள், வழக்கமாகச் செல்லும் பேருந்துகளை விட கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.
அதில், “10.02.2024 அன்று அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் சார்பாக 350 பேருந்துகளும், அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பாக 201 பேருந்துகளும், அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் சார்பாக 15 பேருந்துகளும், மேலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக திருவண்ணாமலைக்கு 23 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
மொத்தம் தினசரி இயக்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன் 612 (திருவண்ணாமலைக்கு 150 பேருந்துகள்) சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது. வார இறுதி நாட்களில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளை விட, நேற்றைய தினம் அதிக அளவில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது.
மேலும், நேற்றைய தினம் (10.02.2024) மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்களும், காவல்துறையினரும் அதிகாலை வரை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து இயக்கத்தினை சரி செய்தனர்” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டு, திண்டிவனம் வழி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்! எப்போதிலிருந்து தெரியுமா?