பள்ளிக்கல்வித்துறையில் பயிலும் மாணவர்களின் பெயர்களுடன், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்கள் 1 கோடியே 16 லட்சம் உள்ளன. இதில் பல பெற்றோருடைய செல்போன் எண்கள் தவறானதாகவும், சில எண்கள் உபயோகத்தில் இல்லாமலும் உள்ளன. இதனால் மாணவர்களுக்கான நலத்திட்டங்களைச் செய்வதற்கும், அவர்களை தொடர்பு கொள்வதற்கும் முடியாமல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில், மாணவர்களின் பெற்றோர் எண்களுக்கு ஒரு OTP அனுப்புவதன் மூலம், அவர்களின் செல்போன் எண்களை சரிபார்க்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி அல்லது தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோரது செல்போன் எண்கள் அல்லது பாதுகாவலரின் செல்போன் எண்கள் பதிவு செய்யப்படுகிறது.
இதன் மூலம், பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்த தகவல் அனைத்தும் எளிதில் அனுப்ப உதவியாக இருக்கும். இதற்காக வாட்ஸ் அப் கேட் வே உடன், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணைத்து கையெழுத்திட்டு, இந்த புதிய முயற்சியை செய்து வருகிறது.
இந்த முயற்சியின் மூலமாக, அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அனைத்திற்கும் விரைவாக தகவல் அனுப்ப முடியும். மேலும், பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மூலம், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எளிதில் தகவல்கள் அனுப்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஓடிபி கேட்கும் போது, ஓடிபி எண்ணைக் கூற முடியாது எனவும், நாங்கள் ஏன் ஓடிபி சொல்ல வேண்டும் எனவும் கூறி மறுத்துள்ளனர். மேலும், பள்ளி திறக்கும் போது நேரில் வந்து சொல்கிறோம் என்றும் கூறியுள்ளனர். இதனால் பள்ளி திறந்த பிறகு இப்பணியை துரிதமாக மேற்கொள்ள, உரிய கால அவகாசத்தை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது குறித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், “மாணவர்கள் பள்ளிக்கு வராதபோது அவர்களையும், அவர்களது பெற்றோரையும் தொடர்பு கொண்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ள மாணவர்களின் செல்போன் எண்களை சரிபார்ப்பதென்பது இயலாத ஒன்று. இது ஆசிரியர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்பணியை பள்ளிகள் திறந்த பின்னர் செய்வதே சரியாக இருக்கும். அப்போது தான் விரைந்து முடிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.