ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் மாக்கம்பாளையம் கிராமத்தில், கூத்தனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இப்பள்ளியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் அதிகமாக படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியாற்றி வந்தனர். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு ஒரு ஆசிரியர் கூட வருவதில்லை.
இதனால் பள்ளிக்கு ஆரம்ப கல்வி முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் 68 பேர், பள்ளிக்கு தினந்தோறும் வந்துவிட்டு, ஆசிரியர் இல்லாததால் திரும்பி வீட்டுக்கு சென்று விடுகின்றனர். பள்ளி திறந்து சில நாள்கள் ஆன நிலையிலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படும் என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் சரவணனிடம் கேட்டபோது, தலைமையாசிரியர் பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாகவும், பிற ஆசிரியர்கள் வராதது குறித்தும், பள்ளி திறக்காமல் குழந்தைகள் திரும்பி போனது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். சத்தியமங்கலத்தில் இருந்து 55 கிமீ தூரத்தில் உள்ள மாக்கம்பாளையம் கிராமத்துக்கு செல்ல வேண்டுமெனில் குரும்பூர், சர்க்கரைப்பள்ளத்தை கடந்து செல்ல வேண்டும்.
இந்த இரு பள்ளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, கடம்பூரில் இருந்து இரு பள்ளங்கள் வழியாக மாக்கம்பாளையம் செல்லும் அரசு பேருந்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் சமவெளி பகுதியில் இருந்து மலைக்கிராமத்துக்கு செல்ல முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
தற்போது மழை இல்லாத சூழலில் கூட மாக்கம்பாளையத்துக்கு அரசு பேருந்து இயக்கப்படவில்லை. கடந்த 2 மாதங்களாக அரசு பேருந்து மாக்கம்பாளையத்துக்கு பேருந்து செல்லாததால், குரும்பூர் பள்ளத்தில் இருந்து 18 கி.மீ தூரம் மக்கள் மாக்கம்பாளையத்துக்கு நடந்து செல்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் பள்ளி செல்ல முடிவதில்லை என்று கூறப்படுகிறது.
மலைப்பகுதியில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்ற விதி இருந்தும் கூட தங்குவதில்லை என குற்றம்சாட்டும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாக்கம்பாளையத்திலேயே தங்கி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 5,845 ஆசிரியர்கள் அரசு பள்ளிக்கு மாற்றம் - tamil nadu school teachers transfer