திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர் தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்கிற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வந்துள்ளார்.
இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக நேற்று செந்தில்குமார் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
மூன்று பேரும் நேற்றிரவு தெய்வசிகாமணி வீட்டில் உறங்கி உள்ளனர். அப்போது தோட்டத்து பகுதியில் சப்தம் கேட்டதால் தெய்வசிகாமணி (76) முதலில் எழுந்து வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை வெட்டி கொலை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார்(45) மற்றும் அலமாத்தாள்(65) இருவரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
![உயிரிழந்த அலமாத்தாள், தெய்வசிகாமணி, செந்தில்குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/29-11-2024/23004129_murder.jpg)
இதையும் படிங்க: '108' ஆம்புலன்சில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சகோதரி உடந்தை.. நள்ளிரவில் பயங்கரம்!
இந்த நிலையில் இன்று காலை செந்தில்குமார் வரச்சொல்லியிருந்த சவரத்தொழிலாளி வீட்டில் வந்து பார்த்தபோது மூவரும் பிணமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவினாசிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் போலீசார் சடலங்களை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வீட்டிற்குள் வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததாக தெரிகிறது.
இதனிடையே, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அவரிடம் செந்தில்குமாரின் மனைவி கதறி அழுதபடி, "தனது குழந்தைகளை நான் எப்படி பார்த்துக் கொள்வேன்? உறங்கிக் கொண்டிருந்த கணவரை வெட்டி கொன்றுவிட்டனர். அவர்களை நிச்சயம் பிடிக்க வேண்டும்." என்று கூறினார்.
பின்னர் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த சம்பவம் ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது" என்று லட்சுமி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தும் மோப்ப நாய் மூலம் தோட்டப்பகுதிகளில் தடயங்களை சேகரித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/29-11-2024/23004129_watsapp.jpg)
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்