திண்டுக்கல்: பழனி நகர் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு நாளை (ஜூலை 13) கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி எவ்வித கட்டணமும், விலையும் இல்லாமல் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி,
காலை 6.00 மணி முதல் இரவு 10 மணி வரை மலைக்கோயிலில் அன்னதானம் தடையில்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (சுமார் 8000 நபர்கள் பயன்பாடு). இது தவிரவும் மலைக்கோயிலில் 2000 உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும்.
கிரிவீதியில் பக்தர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பாதவிநாயகர் திருக்கோயில், பாலாஜி ரவுண்டானா, சுற்றுலா பேருந்துநிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் வின்ச் நிலையம் ஆகிய 5 இடங்களில் பிஸ்கட், பழங்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (சுமார் 20,000 நபர்கள் பயன்பாடு).
தண்டபாணி நிலைய தங்கும் விடுதி வளாகத்தில் தங்கிச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக பிஸ்கட், பழங்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (சுமார் 1,000 நபர்கள் பயன்பாடு).
திருக்கோயிலுக்கு வரும் சிறு குழந்தைகளுக்கு மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (சுமார் 1,000 குழந்தைகள் பயன்பாடு).
கிரிவீதியில் வின்ச் அருகிலும், படிப்பாதை அருகிலும் மற்றும் பாலாஜி ரவுண்டானா அருகிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முனையம் மூலம் (56 குழாய்கள்) குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 19 சின்டெக்ஸ் டேங்குகள் மூலம் கிரிவீதியைச் சுற்றிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மலைக்கோயில், யானைப்பாதை, படிப்பாதை ஆகிய இடங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது.
எனவே, பக்தர்கள் பழநி நகரில் கடையடைப்பு செய்தியை கருத்தில்கொள்ளாமல் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் திருவருளால் திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடுகளை கருத்திற்கொண்டு திருக்கோயிலுக்கு வந்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டு முருகப்பெருமானின் திருவருளை பெற்றுச் செல்லுமா கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: பழனியில் நாளை கடையடைப்பு போராட்டம்.. காரணம் என்ன?