தேனி: தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மூணாறில் கடந்த ஆண்டு கொம்பன் மற்றும் படையப்பா என இரண்டு யானைகள் உலா வந்தது. குடியிருப்புப் பகுதி மற்றும் கடை வீதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்துவது, உணவுகளை உண்பது என அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று தமிழகத்திலிருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரி நைமக்காடு எஸ்டேட் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென படையப்பா யானை லாரியை வழிமறித்தது. நீண்ட நேரமாக வழிமறித்து நின்ற யானை லாரியை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.
இந்தக் காட்சிகளை அந்தச் சாலையில் எதிரே வந்த தொழிலாளர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தும், யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் ஓட்டுநர் லாரியை பின்னோக்கி இயக்கி யானையிடம் இருந்து விலகிச் சென்றார்.
சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றி வந்த யானை பின் எஸ்டேட் பகுதிக்குள் சென்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் படையப்பா யானை பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகை தந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வாகனங்களை வழிமறித்து வருவதால் யானையை விரட்டுவதற்கு வனத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது படையப்பா யானையின் வீடியோ சமூகவலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 'இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' - ஓபிஎஸ் தகவல்