தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரத்தில் குளத்துடன் ஒரு சிவன் கோயில் உள்ளது. தற்போது இக்கோயிலில் உள்ள குளத்தில் தாமரைக் கொடி படர்ந்து விரிந்து, ஓரளவு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர், குளத்திற்குள் வித்தியாசமான 2 உயிரினங்கள் நீந்தி விளையாடுவதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அந்த உயிரினங்கள் காலை மற்றும் மாலை வேலையில் குளத்தின் திட்டுகளில் அமர்ந்து ஓய்வெடுப்பதையும் கண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சாகுல்ஹமீது, கிராம மக்களுடன் இணைந்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில், அக்கிராமத்திற்குச் சென்று கண்காணிக்குமாறு மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவிட்டதன் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் கோயில் குளத்தை கண்காணித்தனர்.
அப்போது, குளத்தில் இருந்தது நீர்நாய் (Otters) என்பது தெரிய வந்தது. பின்னர், இதுகுறித்து பேசிய வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், நீர்நாய்கள் தவறுதலாக இப்பகுதியில் வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால், எப்படி வந்தது என்பது குறித்து கண்காணித்து வருகின்றோம். மேலும், இந்த நீர்நாயால் எவ்வித பாதிப்பும் இல்லை. பொதுமக்களும் அதனைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
தற்போது, அவ்வப்போது வெளியே வந்து விளையாடும் நீர்நாய்களைக் காண ஆர்வத்துடன் திரளான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், நீர் நாய்கள் குளத்தில் குதித்து விளையாடும் வீடியோ காட்சிகளும் அப்பகுதியில் வேகமாகப் பரவி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: லாட்ஜ் கேட்டை உடைத்து உள்ளே நுழந்த யானைக் கூட்டம்.. உடுமலை வைரல் வீடியோ!