சென்னை: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 12 மணியளவில், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி எம்கேபி நகர் மாநகராட்சிப் பள்ளி 150ஆவது வாக்குச்சாவடி மையத்தில், எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைச் சின்னத்தில் லைட் எரிவதாகக் கூறி, ஒரு சில அதிமுக பிரமுகர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி பிரமுகர்களின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் சோதனை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அப்படி எந்த விதமான கோளாறும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஒப்புதல் உடன் மீண்டும் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்றது.
இதனிடையே, எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைச் சின்னத்தில் லைட் எரிவதாகக் கூறிய அதிமுக பிரமுகர் விஜய் மீது, தேர்தல் ஆணையச் சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளதாக வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி கட்டா ரவிதேஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "இறுதி வாக்காளர் வாக்கு அளிக்கும் வரை வாய்ப்பு வழங்கப்படும்" - சத்யபிரதா சாகு - SATYABRATA SAHOO PRESS MEET