திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த குப்புராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் (21). மெக்கானிக்காக பணியாற்றும் இவர் கடந்த 5 ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த வளையம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஸ்ரீராமின் பெற்றோர்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன் வந்துள்ளனர். இதனையடுத்து, ஸ்ரீராமின் இதயம் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஓசூர் காவேரி மருத்துவமனைக்கும், கருவிழி தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, உடல் உறுப்புகளை தானம் செய்த ஸ்ரீராமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரது சொந்த ஊரான குப்புராஜபாளையத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு சமீபத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழக அரசு சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஸ்ரீராமின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனையடுத்து, ஸ்ரீராமின் உடல் அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வினாடி - வினா போட்டி... தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு! - Lok Sabha Election 2024