சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று(பிப்.19) நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தொடரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காதது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரம் முடிந்ததும் 'நேரமில்லா நேரத்தில்' எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, "எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகில் துணைத் தலைவர் அமர்வது தான் பேரவையில் மரபு. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து பலமுறை சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள கோரிக்கையை மறு பரிசீலனை செய்து அதனை ஆவணப் படுத்தும்படி சபாநாயகரிடம் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். இந்த நிலையில், அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்.19) நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையான முன்வரிசை இருக்கையில் ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்தார். இதுவரை அந்த இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் 207A இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இருக்கை மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை. இருக்கை மாற்றம் செய்யப்பட்டதில் எந்த கவலையும் இல்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த போதிலும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட இன்றைய தினமும் அவர் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, வேளாண் பட்ஜெட்டும், அதன் தொடர்ச்சியாக இன்று (பிப்.19) தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் மீதான விவாதமும் நாளை(பிப்.19) நடைபெற உள்ள நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்திலாவது அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இருக்கை மாற்றத்தினால் தான் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தவிர்த்து வருகிறாரா என்று பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல், திருவாரூர், சிவகங்கையில் தொழிற்பேட்டைகள்: பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!