கரூர்: கரூரில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (ஜன. 28) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசுகையில், "அதிமுகவில் தொண்டராக இருக்கிறோம் என்று மக்களிடம் சொன்னால் நீங்கள் நல்லவர்கள் என சொல்வார்கள். அதிமுகவின் பொது செயலாளர் பதவி என்பது நிறைய அம்சங்களை கொண்டது.
அதிமுக பொது செயலாளர் பதவிக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர், தொண்டன் தான் வர வேண்டும். மக்கள் தான் பொது செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், முழு உரிமையும் தொண்டர்களுக்கு தான் இருக்கிறது என்றும் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் கூறியிருந்தனர். ஆனால் அந்த பதவிக்கு தாமாக மகுடம் சூடி கொண்ட எடப்பாடி பழனிசாமி காலில் போட்டு மிதிக்கிறார். அதனை நாம் மீட்க வேண்டும்.
இப்போது அந்த பதவிக்கு ராஜாக்களும், கோடிஸ்வரர்களும், பணத்தை குவித்து வைத்திருக்கிற தங்கமணி, வேலுமணி போன்ற அமைச்சர்கள் தான் வர முடியும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. எடப்பாடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் இல்லை என்றால் தொண்டர்கள் அவரை தூக்கி எறிவார்கள். எடப்பாடி பதவிக்கு வந்த இரண்டே மாதத்தில் அவரது குணம் வெளி வந்துவிட்டது. ஒற்றை தலைமை தான் வேண்டும் என்கிறார்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் பழனிசாமி, 9 தேர்தலிலும் தோல்வி அடைந்திருக்கிறார். கட்சியை அதளபாதாளத்திற்கு தள்ளி விட்டார். சசிகலாவை ஒரு சதவீதம் கூட கட்சியில் சேர்க்க மாட்டாராம். யார் சொல்றது பாருங்க. பதவியை ஊர்ந்து ஊர்ந்து போய் வாங்கும் போது தெரியவில்லையா.
2016ல் நடைபெற்ற தேர்தலில் தனியாக நின்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனாரா?. முதலமைச்சர் ஆக்கியவர்களுக்கு நன்றியுடன் இருந்தால் நல்ல மனிதன் என சொல்லலாம். தமிழகம் மற்றும் அரசியல் களத்தில் இருந்து தொடண்டர்கள் எடப்பாடியை துரத்தி விடுவார்கள். தொண்டன் தான் முதலமைச்சர் ஆக வேண்டும்.
நான்கரை வருடமாக எடப்பாடி பழனிசாமி கேட்டதுக்கெல்லாம் கையெழுத்து போட்டேன். எதுக்கு, எப்படி என சொன்னால் வேற மாறி போயிடும். எல்லாத்தையும் அனுபவித்து விட்டு நன்றி இல்லாமல் இருக்கிறார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - 21 தொகுதி ஒதுக்கீடா? முழுத் தகவல்!