மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியில் (CSR Fund) ரூ.8 லட்சம் மதிப்பில் பேட்டரி கார் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஓஎன்ஜிசி காவிரி அசெட் (ONGC Cauvery Asset) உற்பத்தி பிரிவு தலைவர் மாறன், நகராட்சி தலைவர் செல்வராஜிடம் பேட்டரி காரை மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிகழாண்டில் மட்டும் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியில் இருந்து ரூ.13 கோடி மதிப்பீட்டில் கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவ உபகரணங்களுக்கு செலவிட்டுள்ளோம். துரப்பன பணிகளை, வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் முழுமையாக நிறுத்திவிட்டோம்.
அதற்கு முன்னதாக, துளையிடப்பட்ட கிணறுகளில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பழுதுநீக்கும் பணிகள், சில கிணறுகளில் பழுது ஏற்படும்போது மட்டும் செய்யப்படுகின்றது. உற்பத்தி குறையும்போதும், குறைபாடுகள் ஏற்பட்டாலும் ரிப்பேர் வேலைகள் செய்யப்பட்டு வருகிறது. ஓஎன்ஜிசி வசம் கைவிடப்பட்ட கிணறுகள் ஏதும் இல்லை.
நின்றுபோன கிணறு, உற்பத்தி கிணறு, மீண்டும் ரிப்பேர் செய்யப்பட வேண்டிய கிணறுகள் மட்டும்தான் உள்ளன. துரப்பன பணியின்போது எண்ணெய் மற்றும் எரிவாயு இல்லை என்பது தெரியவந்தால், அந்த நிலங்களை விவசாயிகளிடமே திருப்பி தந்துவிடுவோம். அந்த வகையில், காவிரி அசெட் பகுதியில் துளையிடப்பட்ட 790 கிணறுகளில் தற்போது 350 கிணறுகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன.
அவற்றில் 90 எரிவாவு கிணறு, 90 எண்ணெய் கிணறு என மொத்தம் 180 கிணறுகளில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. பழுது உள்ள 60 கிணறுகளை அவ்வப்போது ரிப்பேர் செய்து எண்ணெய், எரிவாயு எடுக்க முடியுமா என முயற்சி செய்து வருகிறோம். இதன்மூலம் நாளொன்றுக்கு 3 மில்லியன் கியூபிக் மீட்டர் (Cubic Meter) உற்பத்தி செய்யப்படுகிறது.
1989-ல் இந்தியாவின் தேவையில் உள்நாட்டு உற்பத்தி 69 சதவீதம் இருந்தது. தற்போது உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதத்துக்கு கீழ் குறைந்துவிட்டது. பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய செலாவணி சேமிப்பு முக்கியம். ஓஎன்ஜிசி உற்பத்தி செய்யும் எண்ணெய், எரிவாயு மக்களின் வரிச்சுமையை குறைக்கும்" என்றார்.
இதையும் படிங்க: பெட்ரோல் - டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு..! நாளை முதல் அமல்..!