ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான கார் மீது சுற்றுலா வேன் மோதி விபத்து.. ஒருவர் பலி.. 10 பேர் காயம் - TIRUPATTUR ACCIDENT - TIRUPATTUR ACCIDENT
Tirupattur Accident: ஆம்பூர் அருகே கார் விபத்துக்குள்ளாகி ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அவ்வழியாக வந்த சுற்றுலா வேனும் விபத்துக்குள்ளானதில் 8 பேர், காரில் இருந்த 2 பேர் என மொத்தம் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


Published : Jul 13, 2024, 7:56 AM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை அருகே உள்ள அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்தவர், பிரகதீஷ்வரன். இவர் தனது குடும்பத்துடன் காரில் சென்னைக்குச் சென்று விட்டு, மீண்டும் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அதிகாலையில் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கார் தீடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
கார் விபத்தில் ஒருவர் பலி: தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோர தடுப்பு வேலியில் மோதி, தலைகீழாக குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பிரகதீஷ்வரனின் தாய் திலகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த பிரகதீஷ்வரன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.
உதவ வந்த சுற்றுலா பயணிகளும் விபத்தில் சிக்கினர்: இதற்கிடையே, அதே சாலையில் வந்த சொகுசுப் பேருந்து, விபத்துக்குள்ளான காரின் மீது மோதாமல் இருக்க நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக சொகுசு பேருந்தின் பின்புறம் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் மோதியுள்ளது. அதில், சுற்றுலா வேனில் பயணம் செய்த 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, காரில் பயணம் செய்தவர்கள் உட்பட காயமடைந்தவர்களை விரைந்து மீட்ட வாகன ஓட்டிகள், சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்தில் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: என்கவுண்டரில் உயிரிழந்த திருச்சி ரவுடி துரைசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!