கோயம்புத்தூர்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பாரம்பரிய பண்டிகைகள் உள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்த விழாவின் நிறைவு நாளில் வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிட்டு, ஓணம் சத்தியா விருந்து படைத்து, அனைவரும் ஒன்றாக கூடி பாரம்பரிய முறையில் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
மேலும், கேரள ராஜ்யத்தைப் பொற்காலமான அரசாக மாற்றி கேரளாவை ஆண்ட மகாபலி மன்னனின் நினைவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல் அறுவடை திருநாளாகவும் இந்த ஓணம் பண்டிகை என்பது கொண்டாடப்பட்டுவருகிறது என்பது ஐதிகம்.
அந்தவகையில், இன்று (செப்.15) கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: "திராவிட சகோதர சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம் வலிமையை தரட்டும்" - முதல்வர் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து!
இதுமட்டும் அல்லாது, மலையாள மக்கள் அனைவரும் ஓணம் பண்டிகையை ஒட்டி வெள்ளை நிற புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்களுடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் அனைத்து ஐயப்பன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் பலரும் காலை முதலே கோயிலுக்கு வருகை புரிந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு, சாமி ஊர்வலம் மற்றும் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இது குறித்து பேசிய மலையாளி பெண் ஒருவர், "வழக்கமாக ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், இந்த வருடம் வயநாடு நிலச்சரிவு காரணமாக விமர்சையாக கொண்டாடப்படாதது வருத்தம் அளிக்கிறது. அடுத்த முறை எந்த இயற்கை பேரிடரும் நிகழாமல் மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று ஐயப்பனை வழிபட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.