சென்னை: டச்சஸ் கிளப் சார்பில் சென்னையில் வரும் ஜூலை 7ஆம் தேதி "மெட்ராஸ் மெட்ராஸ்" என்ற மகளிர் கார் பேரணி நடைபெற இருக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்கிறது. சுமார் 50 முதல் 65 கி.மீ தூரம் இந்த பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியானது AA மோட்டார் ஸ்போர்ட் சொல்யூஷன்ஸ் மற்றும் FMSCI-இன் ஒப்புதலுடன் தொழில் ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்கள், "இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும், இந்த ஆண்டு புதிதாக குடும்பங்கள் கலந்து கொள்வதற்கும் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், நிறைய கவர்ச்சிகரமான பரிசுகளை இந்த கார் பேரணியில் கலந்துகொள்பவர்களுக்கு தர இருப்பதாகவும், கடந்த ஆண்டு கார் பேரணியில் பங்கேற்றவர்கள் உற்சாகமாகவும் போட்டியானது சிறப்பாகவும் நடைபெற்றதாக தெரிவித்தனர்.
இந்த முறையும் அதேபோல் பங்கேற்பவர்களின் உற்சாகமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது எனவும், ஜூலை 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஹோட்டல் சவேராவிலிருந்து கொடி அசைக்கப்பட்டு இந்த கார் பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
டச்சஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் இந்த கார் பேரணி மிகவும் பிரபலமான விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும் என தெரிவித்தனர். தற்போது இந்த விளையாட்டு, முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர். டீசல் கார்கள் மற்றும் ஜீப் உட்பட அனைத்து எஞ்சின் திறன் கொண்ட கார்களும் இந்த பேரணிக்கு உபயோகப்படுத்தலாம் எனவும், ஒவ்வொரு காரிலும் அதிகபட்சம் நான்கு பேர் பங்கேற்கலாம் எனவும் கூறினர்.
ஒரு காருக்கு நுழைவுக் கட்டணம் ரூ.1,500 வசூலிக்கப்படும் என்றும், மேலும் வருபவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என அறிவித்தனர். பின்னர், ஜூலை 5ஆம் தேதி சவேரா ஹோட்டலில் இந்த பேரணி தொடர்பான முழு விவரங்களையும் பங்கேற்பவர்களுக்கு கூற இருக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!