சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ஆம் தேதி போக்குவரத்துத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தனியார் பேருந்து நிறுவனங்கள், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனைய விவகாரத்தில், ஆம்னி பேருந்து சங்கங்களுடன் இன்று (ஜன.3) பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்களிலும், சென்னை நகர் பகுதிகளிலும் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் சங்க உறுப்பினர்கள் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருக்கக்கூடிய அலுவலகம் மற்றும் பணிமனைகளில் ஆம்னி பேருந்துகளை பராமரித்து, பராமரிப்பிற்குப் பின் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நகர் பகுதிகள் வழியாக கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சென்று, பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லுவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும், பயணிகளுக்கும் ஏற்றவாறு கோயம்பேட்டில் உள்ளது போல் தரைத்தளத்தில் 100க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் வழங்க வேண்டியும், ஆம்னி பேருந்துகளுக்கு நடைமேடை டிராவல்ஸ் நிறுவனங்கள் வாரியாக ஒதுக்காமல், பயணிகளை ஏற்றுவதற்கு ஏதுவாக அரசுப் பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நடைமேடை போல் ஊர்வாரியாக ஒதுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தின் தென் பகுதிகளில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகள் வரும்போது கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், சென்னை நகர் பகுதிகள் மற்றும் அலுவலகம் மற்றும் பணிமனைகளில் ஆம்னி பேருந்து பயணிகளை இறக்கி விடுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஜனவரி 24ஆம் தேதிக்கு முன் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்கள் சென்னை நகர் பகுதிகளில் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதித்தது போல், இன்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்களிலும் சென்னை நகர் பகுதிகளிலும் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: “உதயநிதி மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன்” - விஜயின் அரசியல் வருகை குறித்து அன்பில் மகேஷ்!