சென்னை: திருமுல்லைவாயல் தேவி நகரைச் சேர்ந்தவர், கோபால் (74). இவருக்கு சொந்தமான நிலம், ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியில் அமைந்துள்ளது. இதனை தனது மகன் பெயருக்கு முறையாக பெயர் மாற்றம் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர், அந்த நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டு, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோபால், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட கோபால் கூறுகையில், "தனக்குச் சொந்தமான நிலத்தினை அபகரிக்க நான் உயிருடன் இருக்கும் போதே, சென்னை மாநகராட்சியில் எனது பெயரில் இறப்பு சான்றிதழ் பெற்று போலியாக ஆவணம் தயாரித்து நிலத்தினை அபகரித்துள்ளனர்.
மேலும், அபகரித்த நிலத்தினை டாஸ்மாக் கடைக்கு வாடகை விட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர். இதுபற்றி மின்வாரியம், ஆவடி காவல் ஆணையாளர், வருவாய்த்துறை என அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தும், எந்தவித தீர்வும் ஏற்படவில்லை” என வருத்தம் தெரிவித்தார். வயதான தன்னால் அலைய முடியவில்லை எனவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எனது நிலத்தினை மீட்டுத் தரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீன மடத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு!