கோயம்புத்தூர்: புலியகுளம் அருகே சாலையில் சென்ற முதியவர் மீது கழிவு நீர் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து காட்டூர் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் மருதாசலம். இவர் அருகே உள்ள சௌரிபாளையம் சாலையில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் நோக்கி அதிவேகமாக வந்த கழிவு நீர் லாரி ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி காரை இழுத்துச் சென்றுள்ளது. இதில், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியுள்ளது.
கார் மோதியதில் மருதாசலம் தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் பக்க சக்கரம் மருதாசலம் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மருதாசலம் உயிரிழந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக மருதாசலத்துடன் சென்று கொண்டிருந்தவர் உயிர் தப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போக்குவரத்து பிரிவு போலீசார் விபத்தியில் உயிர் இழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, கழிவு நீர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் பிரவீன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், ஓட்டுநர் பிரவீன் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது லாரி மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கவரப்பேட்டை ரயில் விபத்து: ரயில்வே துறையின் அலட்சியபோக்கே காரணம் என காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு