சென்னை: ஜெய்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த அனுவிரத் விரைவு ரயிலில், ஜோத்பூரில் இருந்து 26க்கும் மேற்பட்ட பெட்டிகளில் 1,600 கிலோ ஆட்டு இறைச்சி ஏற்றி வரப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த இறைச்சியை சோதனை செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இந்த இறைச்சி 5 நாட்கள் பழையது என்றும், இறைச்சிக்கு முறையான மருத்துவச் சான்றிதழ் இல்லை என்றும், இது ஆட்டு இறைச்சியா என்பதுகூட தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இறைச்சி முறையாக பதப்படுத்தாமல் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, அந்த இறைச்சியை பறிமுதல் செய்து, இறைச்சி காலாவதி ஆகியுள்ளதா என்பதைக் கண்டறிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் குமார், ரகசிய தகவலின் அடிப்படையில் ரயில் நிலையம் வந்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வு மேற்கொள்வதை அறிந்த நபர்கள் யாரும் கறியை எடுப்பதற்காக முன்வரவில்லை. ரயிலில் 40 பெட்டிகள் இருந்தன. எங்களால் 26 பெட்டிகளை மட்டுமே இறக்க முடிந்தன. அதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்று விட்டது என்றார்.
மேலும், ரயில் மதுரை நோக்கிச் செல்வதால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கும், ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்து ஆய்வுகளை மேற்கொள்ள கூறியுள்ளோம். முதற்கட்டமாக, கறி ஜெய்ப்பூரில் இருந்து பல கிலோமீட்டர் தள்ளி உள்ள சிக்கந்தர் பகுதியில் ஐந்து நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்டதாக தெரிய வந்துள்ளது எனக் கூறினார்.
தொடர்ந்து, ஐந்து நாட்கள் கடந்து சென்னைக்கு வந்த கறி, சென்னையில் உள்ள பெரிய மால்கள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்பட இருந்தது. யார் யாரெல்லாம் இதை வாங்குகிறார்கள்? யார் யாருக்கெல்லாம் விற்கப்படுகிறது என்று குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
மேலும், கறியை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு எத்தனை நாட்கள் ஆனது என்பது குறித்து தெளிவான முடிவு வந்த பின்பு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுவாக, ஆடு வெட்டிய ஒரு நாளுக்குள் அதை சமைத்து விட வேண்டும். ரயிலில் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட இறைச்சிக்கு முறைப்படி பதப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
கெட்டுப்போன உணவு உண்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆடு அறுத்து முறைப்படி கால்நடை மருத்துவர் உடனிருந்து சான்றிதழ் வழங்க வேண்டும். வெளி மாவட்டங்களுக்கு, மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இறைச்சிக்கு தேவைப்படும் ஆவணங்கள் ஏதுமின்றி ஐந்து நாட்களுக்கு முன்னால் வெட்டப்பட்ட கறிகளைக் கொண்டு வரப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இனி மழை மட்டும் தான்.. வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை!