தருமபுரி: இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 போலீசார் 1959 அக்டோபர் 21ஆம் தேதி வீரமரணம் அடைந்தனர். கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அன்று வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி, காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு தருமபுரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி, பணியின்போது உயிரிழந்த 213 காவலர்களுக்கும், தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: "அதிமுகவை கருணாநிதியாலே ஒன்னும் செய்ய முடியல" - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
இதில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் வீரவணக்க நினைவு தூணுக்குத் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, காவல் துறையின் சோக கீதங்களுடன் 63 குண்டுகள் முழங்க போலீசார் வீரவணக்கம் செலுத்தினர். இந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட ஆட்சியர், தருமபுரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட போலீசார் கையில் கருப்புப் பட்டை அணிந்து, கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்