சென்னை: 2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, வாகன வரி உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, முத்திரைத் தாள் கட்டண உயர்வு என எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்க முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் சுமத்தி தமிழ்நாட்டு மக்களின் கடும் அதிருப்தியை திமுக சந்தித்துக் கொண்டு வருகிறது.
சாதனைகளால் திமுக வெற்றி பெறவில்லை; எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் தான் வெற்றி பெற்றது - ஓபிஎஸ்#ops #spvelumani #TamilnaduNews #TNGovt #ADMK #opanneerselvam #election #DMK #MKStalin #ETVBharatTamilnadu pic.twitter.com/Ks3hlNnroh
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 22, 2024
இதற்கு எடுத்துக்காட்டு, அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தன்னுடைய சாதனைகளால் திமுக வெற்றி பெறவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால்தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில், ‘ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஈடுபட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் இரா.வைத்திலிங்கம் 2025-ல் அதிமுக ஒன்றிணையும் என்று சில நாட்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார். அதிமுக ஒன்றிணைந்து விடுமோ என்ற அச்சத்தில், எஸ்.பி.வேலுமணியின் மீது திமுக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து, வைத்திலிங்கம் மீது நேற்று திமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சீரழிந்து வருவதையும், திமுகவின் மேல் உள்ள கடும் அதிருப்தியையும் மூடி மறைக்க வைத்திலிங்கம் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், இந்த வழக்கு சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதிமுகவை ஒன்றிணையவிடாமல் தடுத்து, அதன்மூலம் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று முதலமைச்சர் கனவு காண்கிறார். அவருடைய கனவு நிச்சயம் பலிக்காது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுபடும், வீறுகொண்டு எழும், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் என்பதை அழுத்தந்திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். இருள் நீங்கி ஒளி தோன்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை"என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை" - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!