தென்காசி: தென்காசி மாவட்டம், இலஞ்சி பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.7) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்தியலிங்கம், புகழேந்தி உள்ளிட்ட கழக மூத்த நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக இயக்கம் தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் என்று எம்ஜிஆர் பல சட்ட விதிகளை உருவாக்கினார். தொண்டர்களுக்காக எம்ஜிஆர் நிரந்தர விதியை உருவாக்கினார். கட்சியின் உட்சபட்ச பதவியான நிரந்தர பொதுச்செயலாளர் பதவியைத் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கினார்.
அதன்படி, கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.
-
தென்காசி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! (07-02-2024) - நேரலை
— O Panneerselvam (@OfficeOfOPS) February 7, 2024
https://t.co/Y08MSy3C6R
முதலமைச்சர் வேட்பாளர் என்றாலும், கட்சியின் பொதுச் செயலாளர் என்றாலும், எதிர்க்கட்சி தலைவர் என்றாலும் என எந்தப் பதவி என்றாலும் நான் தான் இருப்பேன் என்ற சிந்தனையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டார்.
தேசிய அளவில் கூட்டணி வைத்திருக்கும் பிரதமர் மோடி அவரது அருகில் எடப்பாடி பழனிசாமியை வைத்துப் பேசியதை மறந்து விட்டு, தற்போது அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது முதல் எடப்பாடி பழனிசாமிக்குக் கெட்ட நேரம் ஆரம்பித்து சனி உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்துள்ளது.
இப்போது அவரைப் பிடித்திருக்கும் சனி அவரை வீழ்த்தாமல் விடாது. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. எனவே, இந்த பொறுப்பிற்குத் தகுதி இல்லாத எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன்வந்து அந்த பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கூட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட்டணிக்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் அமித்ஷா! எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி அழைப்பா?